ஓடினாள்.. ஓடினாள்..






நிலாமுற்றம் கதைக்களம்

சித்திரக்கதை

14.7.2021

ராதா பாலு

எண்..2961


ஓடினாள்.. ஓடினாள்..


அமுதாவுக்கும் மாரி

முத்துவுக்கும் திருமணமாகி மூன்று வருடங்களாகின்றன. குழந்தை குமுதாவுக்கு இரண்டு வயது. மாரி அந்த ஊர் மார்க்கெட்டில் கூலிவேலை செய்து வந்தான். அவனுக்கு கிடைத்த சம்பளத்தில் அமுதா குடித்தனம் செய்து வந்தாள். அவளும் பக்கத்தில் இரண்டு வீடுகளில் பாத்திரம் தேய்த்து வீட்டு வேலை செய்ததில் கிடைத்த பணம் அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.


திடீரென்று வந்த கொரோனா எல்லார் வாழ்வையும் மாற்றியது போல் இவர்கள் வாழ்வையும் பாதித்தது. இருவருமே வேலைக்கு போக முடியாத நிலை. காய்கறிகளை வாங்கி வீடுகளுக்கு கொண்டு கொடுத்து மாரி சம்பாதித்ததில் ஓரளவு சாப்பிட முடிந்தது. இப்படி ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கை மாரியின் கெட்ட சகவாசத்தால் தாறுமாறாகிப் போனது. வியாபாரத்தில் கிடைத்த பணத்தை வீட்டுக்கு தராமல் குடித்து அழித்தான்.

அமுதாவின் அழுகை அவனை பாதிக்கவில்லை. நாளை சாப்பாட்டுக்கு என்ன வழி என்பதே தினமும் அமுதாவின் கவலையாக இருந்தது.


அன்று மாலை குடி போதையில் வந்த மாரி அவனுடன் இருந்தவர்களிடம் அமுதாவையே விலை பேசியதைக் கேட்டபோது கூனிக் குறுகிப் போனாள் அவள். சே..எவ்வளவு கேவலமாகிப் போய்விட்டான் கணவன் என்று கதி கலங்கிப் போனவளின் உடல் முழுதும் நடுங்க ஆரம்பித்து விட்டது.  


'அடப்பாவி. இந்தக் குடி இப்படி மாற்றி விட்டதே' என எண்ணியவள்  எப்படியாவது இவனிடமிருந்து தப்பிவிட எண்ணி பின்புறக் கதவை திறந்து கொண்டு எங்கு போகிறோம் என்பது தெரியாமல் ஓடினாள். அருகிலிருந்த புகைவண்டி நிலையத்தில் அந்நேரம் புறப்படத் தயாராக நின்றிருந்த ரயிலில் ஏதோ ஒரு பெட்டியில் ஏற முயன்றபோது ரயில் கிளம்ப, அங்கு நின்றிருந்த சிஸ்டர் மேரி குழந்தையை வாங்கிக் கொண்டு அவள் கையைப் பிடித்து மேலே ஏற உதவினார்.


ஏறியவள் குழந்தையை வாங்கிக் கொண்டு மூச்சிரைக்க அப்படியே கீழே அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டாள். அவள் அழுகை அடங்கக் காத்திருந்த மேரி "நீ யாரும்மா? ஏன் அழுகிறாய்? எந்த ஊர் போக வேண்டும்" என்றார்.


"நான் டிக்கெட் வாங்கலைமா. அடுத்த ஸ்டேஷனில் இறங்கி விடுகிறேன்."


"ஏன் உன் உடம்பு இப்படி நடுங்குகிறது?" என்ற மேரி அவளை உள்ளே ஸீட்டில் உட்காரச் சொன்னாள். 


"ஏம்மா இது ஏ.சி.பெட்டி போலருக்கே. வேண்டாம்மா"


மேரியுடன் இருந்த இன்னும் இரண்டு சிஸ்டர்கள்,

"அழாதம்மா. உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி ஓடும் ரயிலில் ஏறினாய்? உன் கூட யாரும் வரவில்லையா?" என்றதும் அவள் அழுகை அதிகமாயிற்று.


அழுது அடங்கட்டும் என்றிருந்தார்கள். டிக்கெட் பரிசோதகர் வந்தபோது  பயந்த அமுதா எழுந்து வெளியே போக முயற்சிக்க மேரி, "இவளுக்கு பெங்களூருக்கு ஒரு டிக்கெட் குடுங்க" என்றபோது ஆச்சரியமாகப் பார்த்தாள் அமுதா!


அவர் சென்றதும் அவளைப் பற்றி விசாரிக்க அமுதா தன் கணவனைப் பற்றியும் அவள் நிலைமையையும் சொல்லி அழுதாள். 


"இனி அவருடன் வாழ்ந்தால் என்னால் மானத்தோடு வாழ முடியாது. என் குழந்தையையும் விற்கத் தயங்க மாட்டார்கள் அவர்கள்" என்றவள் தலை குனிந்து குமுறினாள். குமுதாவோ அந்த சிஸ்டர்களிடம் 

ஒட்டிக் கொண்டு அவர்கள் கொடுத்த பிஸ்கெட்டை மகிழ்ச்சியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்!


"நல்லபடி வாழ்ந்து கொண்டிருந்த உன் வாழ்க்கை கொரோனாவால் இப்படி சீரழிந்து விட்டதே"என்று வருந்தினார்கள் அவர்கள்.


"நீங்கள்ளாம் எங்க இருக்கீங்க? ஸ்கூல்ல டீச்சர்களா? அங்க வேலை ஏதும் இருந்தா எனக்கு தருவீங்களா? சம்பளம் கூட வேண்டாம்மா. எனக்கும் என் குழந்தைக்கும் சாப்பாடு போட்டால் போறும்மா" என்றாள் அமுதா கை கூப்பியபடி.


"நாங்கள் ஒரு ஆசிரமம் நடத்துகிறோம். அதில் உன்னைப் போன்றஆதரவற்ற பெண்கள் மற்றும் அநாதைக் குழந்தைகளைப் பராமரிக்

கிறோம். அங்கு வந்து ஆசிரம வேலைகளை செய்து கொண்டு நீ  இருக்கலாம். உனக்கு சாப்பாடு போடுவதோடு சம்பளமும் தருகிறோம்.  " என்றார் சிஸ்டர் மேரி.


"அம்மா நீங்க எனக்கு தெய்வம்மா. உங்க ஆசிரமத்தில் என்ன வேலை தந்தாலும் செய்யறேன். என்னை மாதிரி இல்லாம என் பெண்ணை படிக்க வெச்சு நல்ல பெண்ணா உருவாக்

கணும்.அதான் என் ஆசைம்மா" என்றவள்,

"அம்மா இப்படியே கீழ படுத்துக்கறேன்மா", என்று இருக்கைகளுக்கு இடையில் படுக்க முயன்றாள்.


"அமுதா இந்த சீட் உன்னுடையது. இதில் வசதியாகப் படுத்துக் கொள்" என்று மேரி சொல்ல, ஒரு நல்ல வாழ்க்கையை தனக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லி நிம்மதியாகத் தூங்கினாள் அமுதா!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கை_ஒளி

மலையரசனும் மந்திரவாதியும்..

அம்மா