சித்திரக்கதை

 




நிலாமுற்றம் கதைக்களம்
சித்திரக்கதை
பதிவு எண்..2961
14.8.2021

இன்னா செய்தாரை...

ஐந்தாவது படிக்கும் குமாரிக்கு மறுநாள் காலாண்டு பரீட்சை. படிப்பதற்கு நிறைய இருந்தது. அவள் அம்மா கண்ணாயி நான்கு வீடுகளில் வேலை செய்கிறாள்.தன் வீட்டு வேலை செய்ய நேரமில்லை. குமாரிதான் காலை எழுந்து வாசல் தெளிப்பதிலிருந்து சமையல் உட்பட அத்தனை வேலைகளும் செய்வாள்.

கண்ணாயிக்கு திருமணமாகி இசக்கிமுத்துவுடன் குடித்தனம் நடத்திய நாட்களில் மிக நல்லவனாக அன்போடும் காதலோடும்தான் இருந்தான். அதன் அடையாளமாக பிறந்தவளே குமாரி. இடையில் ஏற்பட்ட குடிப்பழக்கம் அவனை வேறு மனிதனாக மாற்றியது. தடுத்த கண்ணாயி அவனுக்கு எதிரியாகத் தெரிய, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவளுடன் வாழத் தொடங்கினான்.

எத்தனையோ பேர் கண்ணாயி சார்பாக அவனிடம் பேசியும் மாறாத இசக்கியை விலக்கிவிட்டு மகளுடன் தனியாக வாழத் தொடங்கினாள் கண்ணாயி.இசக்கியின் குணம் பற்றி அறிந்த குமாரி தான் பெரியவளானதும் அம்மாவை வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் எண்ணுவாள்.

குமாரிக்கு படிப்பு நன்றாக வந்தது. எதையும் ஒருமுறை படித்தால் அப்படியே மனனம் செய்யும் திறமை அவளுக்கு உண்டு. தான் ஒரு மருத்துவ
ராக வேண்டும் என்ற ஆசையைத் தாயிடம் சொல்ல அவளோ...நமக்கெல்லாம் அதற்கு அருகதை இல்லை. அநாவசியமாய் ஆசையை வளர்த்துக் கொள்ளாதே...என்றாள்.

ஆனால் தான் மருத்துவராவேன் என்ற விடாமுயற்சியுடன்  படித்தவள்   +2வில் மாநில முதலாக வந்தாள். அவள் விரும்பியபடி படித்து ஐந்து வருடத்தில் மருத்துவரானாள்.தன் மகள் டாக்டர் என்பதில் கண்ணாயிக்கு மனம் கொள்ளாத பெருமை. அரசு மருத்துவமனையில் பணி புரிந்து கொண்டே மேற்படிப்பும் படித்து வந்தாள்.கண்ணாயி இனி வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லி வீட்டின் வசதிகளை அதிகரித்தாள்.

ஒருநாள் மருத்துவமனையில் காசநோயினால் பாதிக்கப்பட்டு  சேர்ந்த ஒரு நோயாளிக்கு குமாரி பரிசோதனை செய்தபோது அவரது உடல்நிலை நிலை மிக மோசமாக இருப்பதைப் பார்த்து அருகிலிருந்த நர்ஸ்களிடம் மருந்துகளைத் தவறாமல் கொடுக்கும்படி கூறினாள்.

அவரிடம் அமர்ந்து ஆறுதலாகப் பேசியபோது
...நான் கண்ணாயியை ஏமாத்தின பாவம்தாம்மா இப்படி கஷ்டப் பட்றேன். அவளும் என் புள்ளையும் எப்படி கஷ்டப்படறாங்களோ...
என அழுதபோது குமாரிக்கு மனதில் ஒரு சந்தேகம் வந்தது. 'அவர் தன் அப்பாவாக இருக்குமோ?'

வீட்டுக்கு சென்றவள் தாயிடம் அந்த நோயாளியைப் பற்றிச் சொன்னவள்...அவர்தான் உன் கணவரானு வந்து பார்த்து சொல்லும்மா...என்றாள். முதலில் மறுத்தவள் பெண்ணுக்காக மனதை திடப்படுத்திக் கொண்டு சென்று பார்த்த போது மனம் கலங்கி விட்டாள். 'இவர்தான்'
என்றவள் பழைய நினைவுகள் மனதை அழுத்த வெளியில் வந்து விட்டாள்.

நாட்கள் கடந்தன. குமாரியின் தீவிர சிகிச்சையில் இசக்கிமுத்து உடல் தேறினார். அவரை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்றபோது, 'எனக்கு யாருமில்லை. இந்த மருத்துவமனையிலேயே ஏதாவது வேலை கிடைக்குமா?' எனக் கேட்டபோது குமாரியின் கண்கள் கலங்கி விட்டது. அவர் எப்படி இருந்தாலும் தன்னைப் பெற்றவராயிற்றே என்று தோன்ற ஒரு முடிவெடுத்தாள்.

'எங்க வீட்டில வந்து உங்களுக்கு தெரிஞ்ச வேலையை செய்துகிட்டு இருப்பீங்களா?' என்றதும் அவள் காலில் விழப் போக, தடுத்து தூக்கியவள் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்.

'அம்மா..யாரு வந்திருக்காங்கனு பாரு' என்றதும், அவரைப் பார்த்த கண்ணாயி தன் மகள் இப்படிச் செய்வாளென்று நினைக்க
வில்லை. 'இவரை எதுக்கு இங்க அழைச்சுட்டு வந்த? இவர்தான் நம்மை பரிதவிக்க விட்ட உங்கப்பா' என்றாள். 'கண்ணாயி என்னை மன்னிச்சுடு. நம்ம பெண்ணை இப்படி அருமையா வளர்த்த உனக்கு நன்றி சொல்லத்தான் நான் வந்தேன். நான் போறேன் டாக்டர்' என்று சொல்லிக் கிளம்ப, குமாரி அவரைத் தடுத்தாள்.

'அப்பா. இனி உங்களைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை. என்னோடவே இருக்கலாம் நீங்க' என்றதும், கண்ணாயி கோபத்தில் ஏதோ சொல்ல வாயெடுக்க, 'அம்மா. நான் டாக்டர் படிப்பு மட்டும் படிக்கல. திருக்குறளும் படிச்சிருக்கேன். 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்'னு படிச்சிருக்கேன்மா. இனி அவரும் நம்மோட இருக்கட்டும். இத்தனை வருடம் கழிச்சு எனக்கு அப்பா கிடைச்சிருக்கார். அவரை நான் இழக்க விரும்பல', என்றதும், அவளைக் கட்டித் தழுவிய கண்ணாயி, 'உன்னைப் போல ஒரு பெண்ணை நான் பெறக் காரணமா இருந்தவராச்சே. அந்த ஒரு காரணத்துக்காக உன் இஷ்டப்படி இங்கேயே இருக்கட்டும்' என்றாள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கை_ஒளி

மலையரசனும் மந்திரவாதியும்..

அம்மா