சித்திரக்கதை

 





சித்திரக்கதை

எண்..2961
12.4.2021
கலெக்டர் முத்துமணி
அன்று ஞாயிற்றுக் கிழமை. அழகாக ஓடிக் கொண்டிருந்த அந்த ஆற்றின் எதிர்க் கரையில் பெரிய தொழிற்சாலை  உருவாக நதியும் காற்றும் மாசுபட்டது. ஆனால் அந்த தொழிற்சாலை இன்று  பலருக்கு வேலை கொடுத்து அவர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கியது. அங்குதான் பெருமாள் வேலை செய்கிறான். 

ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவன் வலையில் சிக்கிய  மீன்களைப்  கூடையில் போடத் திரும்பும்போது  ஒரு ஆண் குழந்தை ஆற்று நீரில் விளையாடுவதைக் கண்டான்.

"யாரு கண்ணு நீ? உங்கப்பா எங்கே?" என்று கேட்டான். அந்தக் குழந்தைக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அருகில் இருந்தவர்களைக் கேட்டபோது யாருக்கும் தெரியாது என்று சொல்லிவிட, அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அவன் கிளம்பியபோது அந்தக் குழந்தை இவனுடன் தானும் வருவேன் என்பதை வேறு மொழியில் கூறியபடி கையைப் பிடித்துக் கொண்டது. கண்ணுக்கெட்டியவரை எந்த மனிதரையும் காணவில்லை.. யாரோ வெளிமாநிலத்தவர் இங்கு வந்தபோது குழந்தையை விட்டுச் சென்று விட்டார்களோ?

பெருமாளுக்கு குழந்தையை உடன் அழைத்துச் செல்வதா, விட்டுப் போய்விடலாமா என்று ஒரே குழப்பம். திருமணமாகி ஐந்து வருடமாகியும் அவனுக்கும் குமுதாவுக்கும்  குழந்தை இல்லை. அக்கம் பக்கத்தார் அவளுக்கு குழந்தை இல்லை என்று பேசுவதை சொல்லி அடிக்கடி வருத்தப்
படுவாள்.

இது கடவுள் நமக்காக கொடுத்த குழந்தை என்று எண்ணி வீட்டிற்கு அழைத்துச் சென்றான். குமுதாவிடம் விஷயத்தை சொல்லி இந்தக் குழந்தையை போலீஸ்
ஸ்டேஷனில் ஒப்படைத்து விடலாம் என்றான்.

குமுதாவோ..ஏன்யா பிள்ளை இல்லாத நமக்கு கடவுளே இந்தப் பிள்ளையை கொடுத்திருக்கிறார். யாராவது வந்து கேட்டால் கொடுத்து விடுவோம்...என்றாள்.

குழந்தைக்கு முத்து என்று பெயர் வைத்து வளர்த்து வந்தனர். குமுதாவிடம் மிகவும் ஒட்டுதல். அவளை விட்டுப் பிரிய மாட்டான். அவளும் அவனிடம் தான் பெற்ற குழந்தை போல் பாசம் காட்ட ஆரம்பித்தாள். அவன் வந்த நேரம் பெருமாளுக்கு அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தது.

எட்டு வயதானபோது முத்துவின் நடவடிக்கைகள் பெண்களைப் போல் மாற ஆரம்பித்தது. பெண்களின் உடையை அணிந்து கொள்வதோடு, அதிகம் பெண்களுடன் விளையாட ஆரம்பித்தான். பெருமாளும் குமுதாவும் சொல்லியும் கேட்கவில்லை. அக்கம்பக்கம் இருப்போர் அவனை அலி என்று கேலி செய்ய ஆரம்பித்தனர். வாய் கூசாமல்..அவன் உன் சொந்தப் பிள்ளை இல்லையே. எங்காவது அனாதை ஆசிரமத்தில் கொண்டு விட்டுவிடு..என்றனர்.

குமுதா மனம் தளராமல்..அவன் நான் பெறாவிட்டாலும் என் குழந்தைதான். அலிகளை 'கடவுளின் குழந்தைகள்' என்பார்கள். அவன் கடவுளால் எனக்கு தரப்பட்டவன்...என்று கூறினாள்.

பெருமாளிடம் சொல்லி அந்த வீட்டை காலிசெய்து ஆற்றின் மறுபக்கம் வேறு வீடு பார்த்துக் கொண்டு சென்றார்கள்.
முத்துவை நல்ல பள்ளியில்  சேர்த்து படிக்க வைத்தாள். அவன் நடை உடை பாவனைகள் முற்றிலும் பெண்களுடைய தாக இருந்ததால் அவளை முத்துமணி என்ற பெயரில் பெண்கள் பள்ளியில் சேர்த்தார்கள். கூடப் படித்தவர்கள் கேலி செய்வதை சொல்லி அழுதபோது குமுதா அவளை அன்பாக ஆதரவாக ஆறுதல் கூறினாள்.

..நீ யாருக்கும் குறைந்தவள் அல்ல. யார் எது சொன்னாலும் கவலைப் படாதே. உன் கவனம் படிப்பிலேயே இருக்கட்டும். மற்றவர் உன்னை விழி விரிய பார்க்கும்படி கலெக்டராகும் எண்ணம் மட்டுமே மனதில் கொண்டு படி..என்றாள்.

பெற்றோரின் வழிகாட்டலோடு ஒவ்வொரு வகுப்பிலும் முதலாக வந்ததுடன்  IASல் முதலாக தேர்ச்சி பெற்று தன்னாலும் எதுவும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கினாள் கலெக்டர் முத்துமணி!
ஏப்ரல் 15..திருநங்கையர் தினம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மந்திரக்கதை

நுண்கதை