எதிர்காலம்

 


முத்திரைக்கதை

எதிர்காலம்
6.5.'21
எண்..2961

#எதிர்காலம்

அருணாசலத்திற்கு கிளி ஜோசியம் பார்ப்பது தொழில். முப்பது வருடங்களாக இந்தத் தொழில் தான் அவன் வாழ்க்கையின் ஆதாரம்.அவன் அப்பா  இறுதிவரை இந்தக் கிளி ஜோசியம் பார்த்துதான் வாழ்க்கை நடத்தினார்.

இவனைப் படிக்க வைத்து ஒரு நல்லவேலைக்கு அனுப்ப ஆசைப்பட்டார். இவனுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. அவன் அப்பா போலவே கிளி ஜோசியம் சொல்வதில் தேர்ச்சி பெற்றான். நான்காம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு அப்பாவுடன் சென்று விடுவான்.

அவன் மனைவியும் தாயும் வீட்டு வேலைகளுக்கு சென்று சம்பாதிப்பார்கள். இரண்டு குழந்தைகள் நான்காம் வகுப்பும், முதல் வகுப்பும் படிக்கிறார்கள். ஓட்டு வீடு ஒன்று சொந்தமாக இருக்கிறது. ஏதோ சாப்பாட்டுக்கு கஷ்டமில்லாத வாழ்க்கை.

தினமும் காலை எட்டு மணிக்கு கிளம்பி வந்து இங்கு உட்கார்ந்தால் மாலை ஏழு மணிக்குதான் வீடு திரும்புவான்.  ஜோசியம் நல்லபடி நடந்தால் அவன் சொல்லியது நடந்தவர்கள், தமக்கு தெரிந்தவரையும் அனுப்புவர்.

யாராவது ஜோசியம் கேட்பவர்கள் வருவார்களா என்று பார்த்தவன்,  அவன் மகன் சரவணன் வேகமாக வருவதைப் பார்த்தான்.

"அப்பா சீக்கிரம் வாங்க. நம்ம வீட்டுக்கு உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க."

எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பியவன் வீட்டுக்கு சென்றபோது  ஒரு பெரியவரும், இளம்பெண்ணும் அமர்ந்திருந்தனர்.

"கிளி ஜோசியம் பாக்கணுங்களா?"

" இல்லப்பா. இந்தம்மாவை நினைவிருக்கா உனக்கு?"

"ஒருநாள் ஜோசியம் பாக்க வந்தாங்க. ஏதோ வியாபாரத்தில பார்ட்னர் ஏமாத்தினதாவும் நஷ்டம் ஆயிடுத்துனும் கேட்ட நினைவு. சரிங்களா?"

"ஆமாங்க. இவங்க என் அப்பா. எங்க பிஸினஸ் பார்ட்னர் ஏமாத்தினதால நாங்க எல்லாம் போயி சாதாரண நிலைக்கு வந்துட்டோம். அப்பா நிறைய ஜோசியர்கிட்ட கேட்டாங்க.

"நான் மீனாட்சி பக்தை. உங்களை கிளியோட பார்த்தபோது   மீனாக்ஷி நினைவு வந்து உங்ககிட்ட கேட்டேன். நீங்க சொன்ன
படியே ஒரு மாசத்தில நாங்களே எதிர்பாராத விதமா கேஸ் எங்க பக்கம் ஜெயிச்சு நஷ்டஈட்டோட  பணம் கிடைச்சுது. எனக்கு உங்க நினைவு வந்து அப்பாகிட்ட சொன்னேன்."

"என் வீடு எப்படிங்க தெரியும் உங்களுக்கு?"

"ரெண்டு நாள் முன்னால உங்க இடத்தில போய் பார்த்தப்போ உங்களைக் காணோம்னு பக்கத்து கடைல விசாரிச்சேன். அவர்தான் சொன்னார்"
என்றாள் அந்தப் பெண்.

"ஆமாம்பா. என் எதிர்காலமே கேள்விக் குறியா இருந்த நேரத்தில உன் கிளி சொன்ன குறி எங்க வாழ்க்கையை மாத்திடுச்சு. அதான் உன்னை பார்த்து நன்றி சொல்ல வந்தோம்" என்றவர் சில பைகளையும் ஒரு கவரையும் ஒரு பெரிய தட்டில் வைத்து அவனிடம் கொடுத்தார்.

"சாமீ என்னங்க இதல்லாம்?"

குழந்தைகளிடம் சில விளையாட்டு பொருட்களைத் தந்தவர், "இந்த பணத்தில உன் குழந்தைகளை நல்லா படிக்கவை. நீயும் நல்லவீடா கட்டி ஏதாவது கடை வெச்சு வியாபாரம் பண்ணு"என்றபடி விடை பெற்றுச் சென்றார்.

"நீங்க உங்க குடும்பத்தோட நல்லா இருங்க சாமி".

அவர் கொடுத்த கவரைப் பிரித்தவன் உள்ளே ஐந்து லட்சம் பணம் இருப்பது கண்டு பிரமித்து விட்டார்கள். அத்து
டன் அவர்கள் அனைவருக்கும் புத்தாடைகள் இருந்தன.

அருணாசலம் தன் கிளியை அள்ளியணைத்தபடி,"என் கண்ணு. எல்லார் எதிர்காலத்தையும் நல்லபடி சொல்ற உன்னால என் எதிர்காலமும் மாறிடுத்து. நன்றி ராஜா" என்றான் ஆனந்தக் கண்ணீருடன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கை_ஒளி

மலையரசனும் மந்திரவாதியும்..

அம்மா