மந்திரக்கதை

 






புதிய உலகம்
21.3.2021
எண்.2961

அது ஒரு குக்கிராமம்.
அங்கிருந்த ராமுவுக்கு ஒரே பிள்ளை கோபு. அவனுக்கு பத்து வயது இருக்கும்போதே அவன் தாய் இறந்துவிட, குழந்தையை வளர்க்க ராமு செங்கமலத்தை திருமணம் செய்து கொண்டான்.

அவளுக்கு கோபுவைச் சிறிதும் பிடிக்காது.அவனை மிகவும் துன்புறுத்துவாள். அவனை எப்படியாவது வீட்டிலிருந்து விரட்டிவிட  நினைத்தவள் பக்கத்திலிருந்த ஒரு காட்டுக்குள் அழைத்துச் சென்று விட்டுவிட்டு
வந்துவிட்டாள்.

அங்கு சில சூனியக்காரிகள் இருப்பதாகக் கேள்விப்பட்டவள் அவர்களிடம் மாட்டிக் கொண்டு திரும்ப வர மாட்டான் என்ற நம்பிக்கையில் ராமுவிடம் 'கோபு காட்டுக்குப் போக அடம் பிடித்ததால் அழைத்துச் சென்றதாகவும் வழியில் காணாமல் போய்விட்டதாகவும்' பொய் சொல்லிவிட்டாள்.

கோபு வழி தெரியாமல்   அங்கிருந்த ஒரு வீட்டுக்குச் சென்றான். அங்கு ஒரு இளம்பெண் இருந்தாள்.

"வாவா! யாராவது வருவார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன்."

"நீங்க யார்? எப்படி இந்தக் காட்டில் தனியாக இருக்கிறீர்கள்?"

"நான் ஒரு ராஜகுமாரி. என்பெயர் தேவசேனா. இது ஒரு சூனியக்காரி வீடு. அவளுக்கு விதவிதமாய் சாப்பிட ஆசை. ஒருநாள் இவள்  யாருமறியாமல் என்னைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டாள். இவள் வீட்டு வேலைகளைச் செய்து சமைத்துப் போட வேண்டும்."

"அவள் இல்லாதபோது நீங்கள் தப்பித்துப் போகலாமே?"

"முடியாது. இந்த வீட்டைச் சுற்றி ஒரு மந்திர வட்டம் போட்டிருக்கிறாள். அதைத் தாண்ட முடியாது. ஆனால் வெளியிலிருந்து எவரும் வரலாம். அவர்களைத் தனக்கு வேலைக்கு வைத்துக் கொள்வாள்.நீயும் இனி வெளியேற முடியாது."

"ஐயோ.இனி என்ன செய்வது?"

"இரவு அந்த மந்திரக் கோலால்என்னையும் சூனியக்காரியாக   மாற்றிவிடுவாள். அவள் என்னை மாற்றும்போது வேறு யாராவது பார்த்து விட்டால் மந்திரம் பலிக்காமல் அவள் இறந்து விடுவாள்"

"இதல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?"

"ஒருநாள் அவள் மது அருந்திய மயக்கத்திலிருந்தபோது சொன்னாள். இன்று நீ மறைவாக இரு. அவள் என்னை மாற்றும்போது நீ சட்டென்று வெளிவந்து அவள் மந்திரக் கோலைப் பிடுங்கிவிடு. அந்த நிமிடமே அவள் மயங்கி விழுந்து இறந்ததும் நாம் இங்கிருந்து வெளியேறி ஊருக்குப் போய்விடலாம்"

வீட்டைச் சுற்றிப் பார்த்தவன் அங்கிருந்த தங்க வெள்ளி நகைகளையும் சாமான்களையும் பார்த்து அதிசயமானான்.

"கவலைப்படாதே. நான் சொன்னபடி நீ நடந்தால் இவை எல்லாம் நமக்குதான். நீ இனி உன் கொடுமைக்கார சித்தியோடு இருக்க வேண்டாம். என்னுடன் உன்னை அழைத்துச் செல்கிறேன்"

திடீரென்று இடிபோல் சிரிப்பு சத்தம் கேட்க நான்கைந்து சூனியக்காரிகள் பறந்துவந்து அவரவர் இடம் சென்றனர்.

உள்ளே வந்த சூனியக்காரி கையில் மந்திரக் கோலுடன் தேவசேனாவைக் கூப்பிட்டு அவள் உருவத்தை மாற்ற உற்றுப் பார்த்தாள்.பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் கண்கள் அடிக்கடி நிறம் மாறிக்கொண்டிருந்தது.
திட்டப்படி வெளிவந்த கோபு சடாரென்று அவள் மந்திரக்கோலைப் பிடுங்க அவள் ஓவென்ற அலறலுடன் கீழே விழுந்து இறந்தாள்.

தேவசேனா கோபுவைக் கட்டியணைத்து நன்றி சொல்லி  இருவருமாக வயிறார சாப்பிட்டு அங்கிருந்த தங்கம் வெள்ளிப் பொருட்களை தேவையான அளவு எடுத்துக் கொண்டு விடிகாலை கிளம்பி கோபு வீட்டுக்கு சென்றனர்.

தான் கொண்டு வந்த செல்வங்களை சித்தியிடம் கொடுத்தவன் ' இனி  சந்தோஷமாக இருங்கள்' என்றவன் அப்பாவிடம், 'நீங்கள் அரண்மனைக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வந்து என்னைப் பார்க்கலாம்' என்றவன் தேவசேனாவுடன் ஒரு புதிய உலகத்தைக் காணப் புறப்பட்டான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நுண்கதை