மகளிர் தினம் - சித்திரக்கதை
மகளிர் தினம்
14.3.'21
எண்..2961
வித்யா சிறு வயதில் சகலகலாவல்லி என சொல்லுமளவு பரத நாட்டியம், சங்கீதம், ஓவியம், கைவேலை என்று அத்தனையிலும் தேர்ச்சி பெற்றதுடன் அவற்றில் பங்கு பெற்று நிறைய பரிசுகளும் வாங்கியிருக்கிறாள். டிகிரி முடித்ததும் அவள் அப்பா திருமணம் முடித்ததோடு, புக்ககத்தார் அனுமதித்தால் வேலைக்குப் போகும்படி சொல்லிவிட்டார்.
அவள் கணவன் ஆனந்த் ஒரே பிள்ளை. திருமணத்திற்குப் பின் அவள் வேலைக்கு செல்வதை அவள் மாமியார் விரும்பவில்லை. ஆனந்தும் அதிகம் பேசுவதில்லை என்பதோடு அவளுடைய ஆசைகளையோ விருப்பங்களையோ கேட்டதே கிடையாது.
எந்த சுவாரசியமும் இல்லாத வாழ்க்கையில் நான்கு வருடத்தில் இரண்டு குழந்தைகளாகிவிட, அவர்களுடன் நேரம் சரியாகிவிட்டது. எந்நேரமும் சமையல், வேலை என்றிருந்ததால் இவளின் திறமைகள் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமலே போயிற்று. சுனிதா பொறியியல் படித்து மும்பையில் வேலையில் இருக்கிறாள். சுரேஷ் அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கிறான்.
மாலை சுனிதா 'அம்மா..ஓவியம் எப்படி? பிடிச்சிருக்கா?' என்ற ஃபோனில் பேசியபோது, வித்யாவுக்கு சந்தோஷத்தில் பேசமுடியாமல் கண்கலங்கி விட்டது. 'அருமையாக வரைந்திருக்கிறாய். மொத்தத்தில் என்னை ஒரு சமையல்காரியாக மட்டும்தான் நீ பார்க்கிறாய் இல்லையா?' என்கிறபோதே அவள் குரல் கம்மியது.
"அம்மா நான் இரண்டு நாளில் நேரே வருகிறேன். உன்னிடம் நிறைய பேசணும்"
மறுநாள் சுனிதா உள்ளே நுழைந்ததும் அவளை இறுக அணைத்துக் கொண்டாள்.
"அம்மா. உனக்குள் இத்தனை திறமைகளா? என்னிடம் சொல்லவே இல்லையே நீ. ஏன்மா இப்படி?"
"நீ என்ன சொல்கிறாய்?"
"இனி என்கிட்ட நீ எதுவும் மறைக்க முடியாது. நீ பரதநாட்டியம் ஆடி மந்திரியிடம் பரிசு பெற்றது, கோலம் போட்டு ஒரு ஆன்மிகப் பெரியவரின் ஆசி பெற்றது, சமையல் போட்டியில் பரிசாக மிக்ஸி..இப்படி இன்னும் எவ்வளவு சாதனை. இதெல்லாம் மறந்துவிட்டு எப்படிம்மா உன்னால் இருக்க முடிந்தது?"
"இதெல்லாம் யார் சொன்னா உனக்கு?"
"உன் நெருங்கிய தோழியையே நீ மறந்து விட்டாயேம்மா.அவள் பெயராவது நினைவிருக்கா?
"யாரு.. மகாலக்ஷ்மி தான் என் தோழி. அவளைப் பார்த்தாயா? எங்க இருக்கா அவ?"
"அட..அதையாவது நினைவு வச்சிருக்கயே. அவங்கதான் என் மேனேஜர். என் ஜாடை பார்த்து அவர் உன் பெண்ணா என்றார். பிறகுதான் அவர் வீட்டிற்கு வரச்சொல்லி உன்னைப் பற்றியவிஷயங்கள் சொல்லி உன்னை ரொம்பப் பாராட்டினார்."
"ஆனா என்னை ஓவியம் வரைந்தது??"
"அது எங்களுக்காக மேடம் வைத்த ஓவியப் போட்டி. அதில் எனக்கு முதல் பரிசு தங்கக்காசு. 'என் தோழி உன் ஓவியத்தில் தத்ரூபமா இருக்கா' என்றவர் பிறகு உன்னைப் பற்றி எல்லாம் சொன்னார். ஸோ ஸ்வீட்மா நீ"
அருகில் வந்த ஆனந்த் வித்யாவின் கைகளை ஆதரவாகப் பிடித்தான்.
"உன்னிடம் இவ்வளவு திறமைகள் இருப்பது தெரியாமலே இருந்துட்டேன் வித்யா. நம்ம சுனிதா சொன்னதும்தான் தெரிஞ்சுது. ஸாரி"
"அப்பா இந்த செயினை அம்மாவுக்கு மகளிர்தின பரிசா கழுத்தில போடுங்கப்பா"
"வந்ததிலருந்து எதுவும் சாப்பிடலயே. இதோ சமையலை முடிக்கறேன்"
"உனக்கு எப்பவும் சமையல்தான். அதைத்தான் என் ஓவியத்தில் வரைந்தேன். இன்னிக்கு நீ சமைக்க வேண்டாம்மா. நாமெல்லாம் ஹோட்டல் போய் சாப்பிடலாம்.உனக்கு மகளிர்தின விடுமுறை!"
கருத்துகள்
கருத்துரையிடுக