அம்மா
சித்திரக்கதை
எண்...2961
14.5.2021
அம்மா..
காரில் சென்று கொண்டிருந்த ஆனந்திற்கு தனக்கு முன்னால் சைக்கிளை குரங்குப்பெடல் செய்து கொண்டு ஓட்டிச்சென்ற சிறுவனைப் பார்த்தபோது மனதில் ஏதோ ஒரு சலனம். தான் இதேபோல் சைக்கிள் ஓட்டிய நினைவு வந்தது. கூடவே அவன் அம்மாவின் நினைவும் வந்தது.
அம்மா இவனுடன் இருந்தபோது தினமும் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும்போது இப்படி இல்லை. மனதில் அம்மாவின் நினைவுகள் அடுக்கடுக்காய் வந்தது.
அவன் அம்மா சுந்தரி அப்பா மாணிக்கம் இருந்தவரை வீட்டை கவனித்துக் கொண்டிருந்தாள்.
அப்பாவுக்கு ஒரு பெரிய கம்பெனியில் வாட்ச்மேன் வேலை. நல்ல சம்பளம். மனைவி, பிள்ளையிடம் பாசம் அதிகம். ஆனந்த் இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே,' நீ பெரிய படிப்பு படித்து இன்ஜினியர் ஆக வேண்டும்' என்பான்.
ஒருநாள் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த பேருந்து இடித்ததில் தடுமாறி விழுந்தவனுக்கு தலையில் பலத்தஅடி. விஷயம் கேட்டு மருத்துவமனைக்கு ஓடிய சுந்தரியிடம் சற்று நினைவு வந்தபோது பேசிய மாணிக்கம், 'நான் பிழைக்க மாட்டேன் சுந்தரி. என் கம்பெனியிலிருந்து உனக்கு பணம் கிடைக்கும். நம்ம பிள்ளையை நல்லா படிக்க வெச்சு இன்ஜினியராக்கு' என்றபடி மயக்கமடைந்தவன் பிறகு கண்திறக்கவே இல்லை.
கணவன் மறைந்ததை சுந்தரியால் தாங்க
முடியவில்லை. ஆங்கில வழியில் படித்த ஆனந்தின் படிப்பிற்கு அதிக செலவானது. சுந்தரி அருகிலுள்ள அரசுப்பள்ளியில் சத்துணவு செய்யும் வேலையுடன். அக்கம்பக்கத்து வீடுகளில் வீட்டுவேலைகள் செய்து சம்பாதித்தாள்.
ஆனந்த் ஆறாம் வகுப்பு படிக்கும்போது தனக்கு பள்ளி செல்ல ஒரு சைக்கிள் வாங்கித்தரும்படி கேட்க, சுந்தரியும் வாங்கிக் கொடுத்தாள். அதில் ஆரம்பத்தில் ஓட்டத் தெரியாமல் குரங்குபெடல் செய்து ஓட்டியபோது சுந்தரி அவனுடனே அலுக்காமல் ஓடுவாள். அவனுக்கு சின்ன தலைவலி என்றாலும் கவலையில் அவனைவிட்டு அகலமாட்டாள்.
அப்பாவின் ஆசைப்படி அவன் இன்ஜினியராகி நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. அம்மாவுக்கும் பென்ஷன் வந்ததால் சிறிது சிறிதாகப் பணம் சேர்த்து ஒரு வீடு வாங்கினார்கள். அடுத்து அவன் அம்மா அவனைத் திருமணம் செய்து கொள்ளச் சொன்னார். காமினியைப் பார்த்தபோதே இருவருக்கும் பிடித்துப் போய்விட திருமணம் நடந்தது.
காமினியிடம் அலட்சியமும் அடங்காமையும் அதிகம்.மாமியாரை மதிக்காமல் வந்த சில மாதங்களிலேயே தனிக் குடித்தனம் போக அடம் செய்தாள். ஆனந்த் மறுத்துவிட அடிக்கடி அவர்களுக்குள் சண்டை வந்தது.
இதை ஓரளவு யூகித்த சுந்தரி தன் தோழி ஒருத்தி இருந்த முதியோர் இல்லம் சென்று அந்த இல்லம் பற்றி விசாரித்தாள். தன் பென்ஷன் தொகை அதன் மாதக்கட்டணத்திற்கு சரியாக இருந்தது.
பிள்ளையை வளர்த்து ஆளாக்கியதோடு சரி, இனி அவன் வாழ்க்கையில் தான் தலையிடுவது சரியல்ல என்று நினைத்தவள் ஒருநாள் தன் சாமான்களுடன் கிளம்பினாள். ஆனந்திற்கு எதுவும் புரிய
வில்லை. காமினி இதை எதிர்பார்த்தவள் போல் பேசாமல் இருந்தாள்.
"அம்மா..ஏன் திடீரென்று இந்த முடிவெடுத்தாய்? இது உன்வீடு. இங்கிருப்பதில் உனக்கு என்ன கஷ்டம்?"
"உங்கம்மாவுக்கு அங்குபோக ஆசை இருந்தால் ஏன் தடுக்கிறீர்கள்?"என்றாள் காமினி, மாமியார் இங்கேயே இருந்து விடுவாரோ என்று பயந்து!
"உன்னை படிக்கவெச்சு நல்ல வேலையில் பார்த்து சந்தோஷமா இருக்கேன். ஆனாலும் எனக்கு சில ஆசைகள் இருக்கில்லையா? ஒரு மாற்றம் வேண்டும். என் வயதுள்ளவர்களோடு பேசிப்பழகி , பக்தி, பஜனை என்றுவாழ விரும்புகிறேன்பா.
நீ எப்பவும் அங்கு வரலாம். காமினியோடு சந்தோஷமா வாழ்ந்து பேரனோ பேத்தியோ பிறந்தால் தகவல் சொல். நான் வருகிறேன்" என்றபடி கிளம்பிச் சென்றாள்.
அம்மா சென்று மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. பிள்ளை ஜகனுக்கு ஒன்றரை வயதாகிறது. அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருந்த மாமனார் மாமியார் இப்போது இங்கேயே தங்கிவிட்டனர்.
தனக்காக பாடுபட்டு உழைத்த அம்மாவை தன்னுடன் வைத்துக் கொண்டு சந்தோஷப் படுத்தத் தெரியாத தான் இன்னமும் வாழ்க்கையில் குரங்குப் பெடல் தான் போட்டுக் கொண்டிருப்பதாக எண்ணியவன் கண்களில் நிறைந்த கண்ணீரோடு அம்மாவைக் காணப் புறப்பட்டான்.
கருத்துகள்
கருத்துரையிடுக