மந்திரக்கதை

 





நிலா முற்றம் கதைக்களம்

மந்திரக்கதை

எண்..2961

20.4.'21


மந்திரவாதி மகேந்திரன்

மாயாஜால மன்னன் மந்திரவாதி மகேந்திரன் மேஜிக் செய்வதில் மிகவும் திறமைக்காரன். பி.காம் படித்தும் தன் அப்பாவின் வாக்கைக் காப்பாற்ற இதுவரைவேறு வேலைக்கு செல்லாமல் மேஜிக்கையே தொழிலாகக் கொண்டு வாழ்கிறான். 


அவனுடைய அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா என்று எல்லோருமே மேஜிக்கில் சிறப்பு பெற்றவர்கள். வெறும் கையைத் திறந்தால் வரும் புறா, காலிப் பெட்டியில் பெண், வெறும் கையை மூடித் திறந்தால் கொட்டும் சாக்லேட் என நிறைய மந்திர தந்திரக் காட்சிகள் பார்ப்பவரை மெய் மறந்து கண் விரியப் பார்க்க வைக்கும். 


முன்பெல்லாம் மேஜிக்குக்கு இருந்த பெருமை தற்காலத்தில் இல்லை. மாதம் இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே பள்ளிகள், அலுவலகங்களில் மேஜிக் ஏற்பாடு செய்கிறார்கள். இப்பொழுதுதான் சிறு குழந்தை கூட கையில் மொபைலில் காட்சிகளை மாற்றி மாற்றி மேஜிக் செய்கிறார்களே!


மகேந்திரனுக்கு சொந்தமாக வீடு இருந்தது. அவன் மனைவி பள்ளி ஆசிரியை.ஒரே மகன் 

நரேன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். 


முன்பெல்லாம் மகேந்திரன் அசல் மந்திரவாதி போன்றே கையில் விசிறி, மந்திரக் கோலுடன் நீண்ட அங்கி தலையில் முண்டாசுடன் மேஜிக் செய்ய செல்லும்போது நரேனுக்கு மிகப் பெருமையாக இருக்கும். தானும் அப்பாவின் கைபிடித்து சென்று  அவர் செய்யும் மேஜிக்கை விரும்பிப் பார்ப்பான். 


இப்பொழுதெல்லாம் அவன் நண்பர்கள் இவனை மந்திரவாதியின் பையன் என்று சொல்வது அவனுக்கு பிடிக்கவில்லை. தங்கள் அப்பாக்களைப் போல் அவன் அப்பா வேலைக்கு போவதில்லை என்று வேறு கிண்டல் செய்கிறார்கள்.


அன்று பள்ளியிலிருந்து வரும்போது மனநிலை சரியில்லாத ஒருவன் நரேனிடம்...ஏங்கண்ணு என்கூட வரியா?...என்றான். அவனை இத்தனை அன்பாக வாஞ்சையாக இதற்குமுன் யாரும் கூப்பிட்டதில்லை. அவன் நண்பர்களோ...நரேன் நீதான் மந்திரவாதி மகனாச்சே. ஏதாவது மந்திரம் செய்து அவனை புறாவாக்கிவிடு...என கிண்டல் செய்ய,  பயந்து கொண்டு ஒரே ஓட்டமாக வீட்டிற்கு வந்து விட்டான்.


அவன் அம்மாவிடம் இதுபற்றி சொல்லி தனக்கு ஒரு மந்திரவாதி பிள்ளை என்று சொல்லிக் கொள்ள பிடிக்கவில்லை என்றான். 


அவன் அம்மா அன்று கணவரிடம்...உங்கள் தொழிலில் இப்போது அதிக வருமானமில்லை. நம் பிள்ளையை நல்லபடி படிக்க வைக்க வேண்டாமா? ஏதாவது நல்ல வேலைக்கு முயற்சி செய்யுங்கள். தன்னை ஒரு மந்திரவாதி பிள்ளை என்று சொல்ல பிடிக்கவில்லையாம் அவனுக்கு...என்றாள்.


...எனக்கு இனி யார் வேலை தருவார்கள்? மேஜிக் என்பது ஒரு உன்னதமான அரிய கலை.  அது பலருக்கு தெரிவதில்லை...


மறுநாள் ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்வோர் குடும்பத்துடன் நடந்த கெட்-டுகெதர் நிகழ்ச்சிக்கு

அழைத்திருந்தார்கள். நிகழ்ச்சி மூன்று மணி நேரம் மிக ஜோராக நடந்தது. எல்லோரும் மிக ரசித்துப் பார்த்து பாராட்டினார்கள். 


திடீரென்று அனைவரும் பரபரப்பாக நிர்வாக இயக்குனர் வந்திருப்பதாக சொல்லி அவரை வரவேற்கச் சென்றார்கள். அவரை மகேந்திரனுக்கு எங்கோ பார்த்த மாதிரி தோன்றியது.

மேஜிக் நிகழ்ச்சி பற்றி அறிந்து பாராட்ட வந்தவர்...ஹேய் மகேந்திரா எப்படி இருக்க? என்னை தெரியலயா?...

எனவும்தான்,  அவர் தன்னுடன் பள்ளியில் படித்த நெருங்கிய நண்பன் பாஸ்கர் என்பது புரிந்தது.


...பாஸ்கர் நீ நல்லா இருக்கியா? நீதான் இந்த கம்பெனி M.Dயா?...


...ஆமாம். உன்னை பார்த்தது ரொம்ப சந்தோஷம். நீ எங்க வேலைல இருக்க? மேஜிக்

கையும் விடாமல் தொடர்கிறாயே?...


...அப்பாவுக்கு பிறகு நான் மேஜிக் நிகழ்ச்சிகளைத் தொடர்கிறேன். இதில் இப்போ அதிகம் வருமானமில்லை. என் பிள்ளைக்கு நான் இப்படி செய்வது கொஞ்சமும் பிடிக்கவில்லை. எனக்கு இனி யார் வேலை கொடுப்பார்கள்...


...அட கவலையை விடு. என் கம்பெனிக்கு ஒரு அக்கவுண்ட்டெண்ட் வேணும். நாளை முதல் நீ வேலையில் சேர்ந்துக்கோ. விடுமுறை நாட்களில் உன் மேஜிக்கும் விடாமல் செய்...


...பாஸ்கர் உனக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. நடப்பதெல்லாம் மாயமந்திரம் மாதிரி இருக்கு...


...நீயே மந்திரவாதி

தானே!...என்று சிரித்தவர்... ஒருநாள் உன் குடும்பத்துடன் வீட்டுக்கு வா. நிறைய பேசணும். நாளைக்கு கண்டிப்பா ஆஃபிஸுக்கு வந்துவிடு!...


இனி மகேந்திரன் வாழ்க்கையில் மகிழ்ச்சிதான்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கை_ஒளி

மலையரசனும் மந்திரவாதியும்..

அம்மா