மலையரசனும் மந்திரவாதியும்..

 


#மந்திரக்கதை

மலையரசனும்மந்திரவாதியும்..
என்..2961
21.5.'21

அந்த சிறு கிராமத்தில் வரிசையாக வீடுகள். தூரத்தில் இருந்த அந்த மலையைப் பார்த்தால் அதில் வளர்ந்துள்ள செடி கொடிகளும் பாறைகளும் ஒரு மனிதன் தலையில் துண்டால் போர்த்திக் கொண்டு புன்னகை புரிவது போல் இருக்கும்!

வாசு அவன் தாத்தா பாட்டி ஊருக்கு அடிக்கடி விடுமுறைக்கு வருவான். பக்கத்திலுள்ள நகரத்தில் அவன் தந்தை பணி புரிந்து கொண்டிருந்தார். இங்கு அவனுக்கு நான்கைந்து நண்பர்கள் உண்டு. எல்லாருமாக நாள் முழுதும் விளையாடுவதும் ஊரைச் சுற்றுவதுமாக பொழுதைக் கழிப்பார்கள்.

அந்த மலைப் பக்கம் மட்டும் போகக் கூடாது என்று பெரியவர்கள் எச்சரித்தாலும், அங்க போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு அதிகமாயிற்று.

ஒருநாள் வாசு அவன் நண்பர்களுடன் அந்த மலைப் பக்கம் போக ஒரு திட்டம் போட்டான். அந்த ஊருக்கு பக்கத்து ஊரில் இருக்கும் நண்பன் வீட்டுக்கு சென்று தங்கி வருவதாகக் கூறி எல்லா நண்பர்களும் மாலை கிளம்பினார்கள். கையில் தண்ணீர் சில தின்பண்டங்களுடன் சென்றவர்கள் அந்த மலை அடிவாரம் சென்று பார்த்தபோது யாரும் அங்கு செல்லாததால் பசுமையாக அழகாக இருந்தது. பௌர்ணமி நிலவில் மலை இன்னும் மகிழ்ச்சியாக சிரிப்பது போல் இருந்தது. எல்லோரும் சற்று நேரம் விளையாடி விட்டு பேசிக் கொண்டே தின்பண்டங்களை சாப்பிட்டார்கள்.

வாசு நண்பர்களிடம்...எவ்வளவு
அழகான இடம். இங்கு பகலில் வந்து விளையாடக் கூடாது என்கிறார்களே நம் வீட்டுப் பெரியவர்கள். நாளை முதல் நாம் இங்கு வந்து விளையாடுவோம்...என்றான்.

அச்சமயம்...வேண்டாம் குழந்தைகளே. பகலில் வந்தால் உயிருடன் திரும்பிப் போக முடியாது...என்ற குரல் மலையிலிருந்து கேட்டது.
எல்லோருக்கும் பேசுவது யாரெனக் குழப்பமாக இருந்தது.

சுந்தர்... பயமா இருக்கு. நாமல்லாம் திரும்பிப் போயிடலாம். எங்க தாத்தா இந்த மலையில் பேய் பிசாசல்லாம் இருக்கற்தா சொல்வாருடா. அதான் இங்க வரவேண்டாம்னேன்...என்றான்.
வாசு...பயப்படாதே. நாம அஞ்சு பேர் இருக்கோம். யாரு பேசறதுனு பார்த்துடுவோம்...என்றான்.

...ஏங்க. நீங்க யாரு? எங்க இருக்கீங்க? பகல்ல ஏன் இங்க வரக்கூடாதுனு காரணம் சொல்லுங்க...

...சொல்றேன்பா. ஒரு காலத்துல நான் இந்த ஊரை ஆண்ட அரசன். நிறைய தங்கம் வெள்ளி பணம் எல்லாம் என் அரண்மனையில் இருந்தது. ஒரு மந்திரவாதி வந்து என்னை மயக்கி என் உருவத்தை தான் மாற்றிக் கொண்டு என் பொக்கிஷங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு போனதுடன் என்னையும் இப்படி மலையாக மாற்றி விட்டான்...

...நாட்டு மக்கள் என்ன ஆனார்கள்?...

...அவர்களையெல்லாம் ஊரை விட்டு விரட்டியதுடன் இந்த மலையில் ஒரு பாதாள அறை அமைத்து அதில் நாட்டின் பொக்கிஷங்களை பதுக்கி வைத்திருக்கிறான்...

...அந்த மந்திரவாதி இப்பொழுது இருக்கிறானா?...

...ஆம். இரவில் சுற்றிவிட்டு பகலில் அவன் இங்கு வந்து படுத்துறங்குவான். அச்சமயம் அவன் சாதாரண மனிதனைப் போல மாறிவிடுவான். அந்த நேரம் அவன் சக்தியை  அங்குள்ள கூண்டில் இருக்கும் கிளியின் உடலில் செலுத்தி விடுவான். அந்தக் கிளியைக் கொன்றால் அவனும் இறந்து விடுவான்.ஆனால் இவன் செய்யும் சில பயங்கர செயல்களை செய்து மக்களை இங்கு வரவிடுவதில்லை...

...உங்களை விடுவிப்பது எப்படி?...

...மந்திரவாதியின் ரகசிய அறையில் ஒரு குடுவையில் மஞ்சள்நிற திரவம் இருக்கும். அதனை எடுத்து இந்த மலை உச்சியில் தெளித்தால் நான் உயிர் பெற்று மேலுலகம் சென்று விடுவேன்...

...ரகசிய அறை எங்குள்ளது?...

...மலையின் வலப் பக்கத்தில் ஒரு இரும்புக் கதவு இருக்கும்.அதுதான் அவன் அறை...

...அரசே. நாங்கள் நாளை காலை வந்து அந்த மந்திரவாதியை கொன்று உங்களை விடுவிக்கிறோம்...

...நல்லது குழந்தைகளே. கடவுள் உங்களுக்கு துணையிருப்பார்...

மறுநாள் காலை வாசு நண்பர்களுடன் சென்று மலை யரசன் சொன்னபடி ரகசிய அறைக்குள் சென்று கிளியைக் கொல்ல, மந்திரவாதியும் இறந்தான். அங்கிருந்த திரவத்தால் உயிர் பெற்ற மன்னன் நன்றி சொல்லி மேலுலகம் சென்றான். பொக்கிஷங்களை அரசிடம் ஒப்புவித்த மக்கள் வாசுவின் தைரியத்தைப் பாராட்டினர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மந்திரக்கதை

நுண்கதை