நம்பிக்கை_ஒளி

 



முத்திரைக்கதை

எண்..2961
7.4.2021

#நம்பிக்கை_ஒளி

ஸ்ருதியும் ஸ்ரவணும் தினமும் பள்ளிக்கு நடந்துதான் செல்வார்கள். அன்று ஸ்ருதி வரும் வழியில் கண்ட காட்சி அவளை ஆச்சரியப் படுத்த ஸ்ரவணிடம்..அண்ணா அந்த அங்கிள் ரிக்க்ஷாவை எப்படி இழுத்துட்டு போறார் பாரேன்! பாவமில்ல..

..ஆமாம். இது மாதிரி நாம பார்த்ததே இல்லயே..

இந்த விஷயத்தை அம்மா லக்ஷ்மியிடம் சொல்ல அவளோ முன்பெல்லாம் மனிதர் இழுக்கும் ரிக்க்ஷாக்கள் உண்டு என்றாள்.

அன்று இரவு ஸ்ருதிக்கு அதே நினைவு. பாவம் அந்த அங்கிள். இப்படி இழுத்தால் கை வலிக்காதோ என்று எண்ணியபடி தூங்கி விட்டாள்.

மறுநாள் இருவரும் பள்ளியிலிருந்து வீடுவரும்போது அதே ரிக்க்ஷா தெருவோரம் நின்று கொண்டிருந்தது.  இருவரும் அவரிடம் சென்று விசாரித்தனர்.

..உங்க பேர் என்ன அங்கிள்? நீங்க எங்க இருக்கீங்க?..

..என்பேரு ஹரிராம். நீங்க எந்த ஸ்கூல்ல படிக்கறீங்க?..

..இங்க பக்கத்துல இருக்கற ஸ்கூல்ல. நீங்க ஏன்  இப்படி கஷ்டப்பட்டு இந்த ரிக்க்ஷாவை இழுக்கறீங்க. உங்களுக்கு கால், கை எல்லாம் வலிக்கலியா?..

..ஆமாம் கண்ணுங்களா. என்ன செய்யற்து..

..எங்களை இந்த ரிக்க்ஷால தினமும் ஸ்கூலுக்கு கொண்டு விடுவீங்களா?..

..ஓ..கொண்டுவிட்டு அழைச்சிட்டும் வருவேன் ..

..எங்க கூட வாங்க..என்றபோது, அவர்களையும் ஏற்றிக் கொண்டு வீட்டில் கொண்டு விட்டார்.

..அம்மா  நாங்க சொன்ன ரிக்க்ஷா அங்கிள் வந்திருக்காரு..

வெளியில் வந்த லக்ஷ்மி அந்த ரிக்க்ஷாவைப் பார்த்து பயந்து விட்டாள். இதில் எப்படி குழந்தைகள் உட்காருவார்கள், இவரால் இழுக்க முடியுமா என்ற சந்தேகம்.

..அம்மா நீ எங்களை ஆட்டோல ஸ்கூல் போக சொன்னியே, இந்த ரிக்க்ஷால நாங்க போயிட்டு வரோம்மா. ஆசையா இருக்கு..என்றார்கள் இருவரும்.

ஹரிராம்..நான் பக்கத்து கிராமத்திலருந்து இங்க வந்தேன். ஒரு கடை  வச்சிருந்தேன். நஷ்டமாயிப் போயி, என் சம்சாரத்தோட நகை நட்டெல்லாம் வித்துட்டோம்மா. இது எங்கப்பாவோட ரிக்க்ஷா. இதை ஓட்டி பிழைக்கலாம்னு இந்த ஊருக்கு வந்தோம். இதில ஏற பயப்படுறாங்கம்மா..என்றார்.

..உன் மனைவி ஏதாவது வீட்டு வேலைக்கு போகலாமே?..

..எனக்கு ஒரு பையன் இருந்தான்மா. அவனுக்கு நாலு வயசா இருக்கும்போது விஷக்காய்ச்சல்ல இறந்துட்டான்மா. அந்த நினைப்புலயே என் சம்சாரத்துக்கு உடம்பு மெலிஞ்சு போய் வெளிய எங்கயும் வேலை செய்ய முடியாம போயிடுச்சு. வைத்தியம் செய்யவும் பணமில்லம்மா..

அவனைப் பார்க்க லக்ஷ்மிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவர்கள் வீட்டைச் சுற்றி பெரிய தோட்டம் இருப்பதால் அதில் வேலை செய்யமுடியுமா என்றாள். ஹரிராமுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

..நாளையிலிருந்து குழந்தைகளை பள்ளியில் விட்டு வந்து தோட்டவேலை செய். உன் மனைவியும்  வந்து வீட்டு வேலைகளை செய்யட்டும். அவள் மனமும் சற்று ஆறுதலாகும்..என்றாள்.

..அம்மா நீங்க தெய்வம்மா. நான் உங்க வீட்டு வேலைகளை சந்தோஷமா செய்யறேன்மா..

..குழந்தைகளை ஜாக்கிரதையா அழைச்சிட்டு போ. உன்னை நம்பிதான் அவர்களை அனுப்புவதோடு வேலையிலும் சேர்த்துக் கொள்கிறேன்..

..உங்க நம்பிக்கையை நான் காப்பாத்துவேன்மா. நாளைக்கு பள்ளிக்கு ரெடியா இருங்க கண்ணுங்களா..என்றபடி வாழ்வின் வெளிச்சத்தை எண்ணி நம்பிக்கையோடு சென்றான் ஹரிராம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலையரசனும் மந்திரவாதியும்..

அம்மா