பழுத்த மரம்
எண்..2961
7.6.2021
விடிகாலை எழுந்து பல் துலக்கி காபி குடித்துக் கொண்டு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார் செங்கேணி.
'முன்னாள் முதலமைச்சர் பரிதிஇளம்மாறன் அவர்கள்தம் எழுபத்தெட்டாம் வயதில் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அன்னாரது உடல் பொதுமக்கள் மரியாதைக்காக கட்சி மண்டபத்தில் வைக்கப்பட்டு மாலை தகனம் நடைபெறும்' என்ற செய்தி படத்துடன் ஒளிபரப்பாயிற்று.
செங்கேணி செய்தியைக் கேட்டு..பரிதி. போயிட்டியாப்பா...என்று குரல் உயர்த்தி அழுதார். உள்ளிருந்து வந்த அவர் மனைவி காளியம்மா..என்னங்க என்னாச்சு? ஏன் அழறீங்க?..என்று கேட்க,..என் நல்ல நண்பன் பரிதி என்னைவிட சின்னவன் போயிட்டான்..என்று அழுதார்.
அவளும் செய்தியைக் கேட்டு பரிதாபப் பட்டாள்.
அடுத்த அரைமணியில் செங்கேணியின் கைபேசி ஒலிக்க அதை எடுத்தவனிடம் பரிதியின் மகன் குமரன்மாறன் பேசினான்.
...பெரிப்பா. அப்பா நம்மை விட்டு போயிட்டார். நீங்கதான் அவருக்கு கட்டைகளைக் கொண்டு வந்து தகனம் செய்யணும்னு தன் ஆசையை என்கிட்ட சொன்னதோட உயிலும் எழுதி வெச்சிருக்காரு. நம்ம கட்சி ஆளுங்க கார் எடுத்துக்கிட்டு மதியம் வருவாங்க. நீங்க வந்துடுங்க. தகன மேடைல நீங்கதான் கட்டைகளை அடுக்கணும்...என்றான்.
செங்கேணிக்கு பழைய நினைவுகள் வந்தன. அவனும் பரிதியும் ஒன்றாகப் படித்தவர்கள். செங்கேணி மூன்று வயது முதல் தன் அம்மாயி ஊரான கூனஞ்சேரியில்தான் வளர்ந்தான். அவனும் பரிதியும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பரிதி வசதியான வீட்டுப் பிள்ளை என்றாலும் செங்கேணியின் உற்ற நண்பன். இருவருமாக மாங்காய் அடித்து சாப்பிடுவதும், புளியங்காய் தின்பதும், ஆற்றில் குளிப்பதுமாக இணைந்தே இருப்பார்கள்.
ஐந்தாம் வகுப்பில் படிப்பு வராமல் செங்கேணி ஃபெயில் ஆகிவிட, அவனை அவன் அப்பா சொந்த ஊருக்கு அழைத்து வந்துவிட்டார். தன் விறகுக்கடையில் வேலைக்கு அமர்த்தினார். படிப்பு வராவிட்டாலும் பந்தல் போடுவது, கூரை போடும் விஷயங்களில் செங்கேணி திறமை பெற்றான். அவன் அப்பாவுக்கு பின் கடையைப் பெரிதாக்கினான். யார் வீட்டுத் திருமணம், பூப்புநீராட்டு விழா, பிறந்தநாள் என்றாலும் இவன்தான் முதலில் கைதொட்டு பந்தல் போடுவான். அவ்வளவு ராசியான கை.
இறப்பிற்கு தகனம் செய்யும் கட்டைகளும் இவன் கடையில்தான் வாங்குவார்கள். அவனுடைய ஒரே மகன் தன் தொழிலுக்கு வர வேண்டாமென்று நன்கு படிக்க வைத்து துபாயில் என்ஜினியராக இருக்கிறான்.
சில மாதங்களுக்கு முன் தன் சொந்த ஊருக்கு பரிதி வந்தபோது அவரைப் பார்க்க செங்கேணி சென்றிருந்தான். எத்தனையோ முறை பரிதி அவனை சென்னை வரச்சொல்லியும் அவன் மறுத்து விட்டான். அவனுக்கு அமைச்சர் நல்ல நண்பன் என்பதையும் எவரிடமும் சொன்னதில்லை. அதனால் பரிதிக்கு தொல்லைகள் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.
அன்று வெகுநேரம் பேசிக் கொண்டிருந்த பரிதி தான் மறைந்தபின் தனக்கு செங்கேணிதான் தகனத்திற்கான மரங்களைத் தர வேண்டும் என்பதைத் தன் ஆசையாக சொன்னார். ஆனால் அதை உயிலாக எழுதி வைப்பார் என அவன் எண்ணவில்லை.
கார் வந்ததும் மரக்கடை சென்று தேவையான நல்ல கட்டைகளுடன் சிறந்த சில சந்தனக் கட்டைகளையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான். இவ்வளவு உயர்நிலையில் இருந்தும் பரிதிக்கு தன்மேல் அவர் கொண்டிருந்த நட்பு மெய்சிலிர்க்க வைத்தது.
சென்னை சென்று பரிதியைப் பார்த்தபோது செங்கேணியால் துக்கத்தை அடக்க முடியாமல் கதறிவிட்டான். தகன
மேடையை தான் கொண்டு
வந்த கட்டைகளால் அடுக்கி உடலின்மேல் சந்தனக் கட்டைகளை அழகாக அடுக்கினான்.
அனைவராலும் இறுதி மரியாதை செலுத்தப்பட, குமரன்மாறன் நெருப்பு வைத்ததும் அவன் அருகிலேயே இருந்து தகனமேடையை சரி செய்தான்.
அவனைப் பார்த்தவர்கள் பரிதியின் மகனிடம்..யார் இந்த பெரியவர்?...என்றபோது ,
...என் அப்பாவின் உயிர் நண்பர்...என்றான் குமரன்மாறன்.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நடப்பதுநட்பு.
என்பதற்கேற்ப தனக்கு இணையாக இல்லாத எளிய மனிதருடனான நட்பை பரிதி இறுதிவரை காப்பாற்றி
யதோடு அதைப் பொதுவில் வெளிப்பட வைத்த அவரது சிறந்த குணம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக