நாயின் பாசம்

 


நுண்கதை

எண்..2961

30.6.2021


நாயின் பாசம்


சுரேஷும் சுனிதாவும் ரூபி என்ற நாயை மிக ஆசையுடன் வளர்த்து வந்தார்கள்.

பள்ளியிலிருந்து வந்ததும் அவர்களோடு விளையாடும்.  வெளியில் மாடிப்படி கீழேதான் படுத்திருக்கும்.


ரூபி சில மாதங்கள் முன்பு குட்டி போட்டபோது  அதிலிருந்த ஒரு ஆண் குட்டிக்கு ஜம்போ என்று பெயர் வைத்து வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அதுவும் இவர்களிடம் ஒட்டிப் பழகியதோடு ரூபியுடன் சேர்ந்து விளையாடுவதைப் பார்க்கவே கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.


அன்று காலையிலிருந்து ரூபியையும் ஜம்போவையும் காணவில்லை. மாலை பள்ளியிலிருந்து வந்தபோது ஜம்போ மட்டுமே இருந்தது. முகம் வாடி வருத்தமாக இருந்தது. 


இவர்களைப் பார்த்ததும் அழுவது போல் முனகிக் கொண்டே  சுரேஷின் பேண்டைப் பிடித்து கூட வரும்படி அழைத்து சென்றது. 

இருவரும் ஒரு தண்ணீர் பாட்டில்,பிஸ்கட் பாக்கெட்டுடன் ஜம்போவுடன் சென்றார்கள். 


அடுத்த தெருவில்  சாலை ஓரத்தில் முனகியபடி ரூபி படுத்துக் கிடந்தது. சுரேஷ் அருகில் சென்று கூப்பிட்டு தடவினான்.  உடலெல்லாம் ரத்தம். காரில் அடிபட்டு‌ மூச்சு விட முடியாமல் தவித்தது. சுரேஷையும் சுனிதாவையும் பாதி மூடிய கண்களோடு அன்பொழுகப் பார்த்த ரூபி சுரேஷின் மடியில்  தலையை வைத்து முனகுவது போன்ற சத்தத்துடன் கண்களை மூடிக் கொண்டு விட்டது. 


அங்கு வந்த அவர்களின் பெற்றோர் ரூபி அருகில் சென்றபோது அது இறந்து விட்டதை சொல்ல, சுரேஷ் அழுது விட்டான். ஜம்போ ரூபியைச் சுற்றி சுற்றி வந்து முனகியது. அருகில் ஒரு குழி தோண்டி அதில் ரூபியைப் புதைத்தார்கள். 


அன்று முதல் தினமும் ஜம்போ ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ரூபியைப் புதைத்த இடத்திற்கு சென்று சற்று நேரம் படுத்துக் கொண்டிருந்து விட்டு திரும்ப வருவதை வழக்கமாகக் கொண்டது. நாய்களுக்கு கூட தாயிடம் பாசம் உண்டு போலும்!


ராதாபாலு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்திரக்கதை

ஓடினாள்.. ஓடினாள்..